5915.

ஆண்டு,எழுந்து நின்று, அண்ணல் அரக்கனை,
நீண்ட கையன்வணங்கினன்; 'நீதியாய்,
மூண்ட கோபம்முறையது அன்றாம்' என,
வேண்டும்மெய்உரை பைய விளம்பினான்.

     ஆண்டு எழுந்துநின்று - (வீடணன்) அப்பொழுது அச்சபையில்
எழுந்து நின்று கொண்டு; அண்ணல் அரக்கனை - பெருமை தங்கிய
அரக்கனான இராவணனை; நீண்ட கையன் வணங்கினன் - நீண்ட தன்
கைகளைக் கூப்பி வணங்கியவனாய்; மூண்ட கோபம் முறையது அன்று என
-
'நீதி நெறி வழுவாதவனே ! இப்பொழுது மிகுதியாகக் கொண்ட கோபம் நீதி
முறைமை உடையதன்று என்று; வேண்டும் மெய் உரை - யாவரும்
விரும்பத்தக்க உண்மை வார்த்தைகளை; பைய விளம்பினான் - (அவன்
கோபம் அடங்கும்படி) அமைதியாகக் கூறினான்.

     இதில், 'மூண்டகோபம் முறையது அன்று' என்று வீடணனால்
தொகுத்துச் சுட்டப்பட்டது, அடுத்த ஐந்து கவிதைகளில் வகுத்துக்
காட்டப்படுகின்றது.                                          (111)