அறுசீர் ஆசிரியவிருத்தம் 5916. | 'அந்தணன்,உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் தந்தவன்,அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து, தக்கோய் ! இந்திரன் கருமம்ஆற்றும் இறைவன் நீ; "இயம்புதூது வந்தனென்" என்றபின்னும், கோறியோ, மறைகள் வல்லோய் ? |
தக்கோய் ! -(அறிவு ஆற்றல்களில்) தகுதி உடையவனே !; மறைகள் வல்லோய் ! - வேதங்களில் வல்லவனே ! ஆதியின் உலகம் மூன்றும் அறத்தின் தந்தவன் அந்தணன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்து -ஆதி காலத்தில் மூவகை உலகங்களையும் தருமத்தின் பலங் கொண்டு படைத்தவனான பிரமனது அன்புக்கு அமைந்த தவவழியை அறிந்து, (செய்து முடித்து வரம் பெற்று); இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ - தேவேந்திரனது திரிலோக ஆட்சியைக் கைப்பற்றி ஆளவல்ல பேரரசன் நீ (அப்படியிருந்தும்); இயம்பு தூது வந்தனென் என்ற பின்னும் கோறியோ - 'ஒருவன் கூறியதைச் சொல்லும் தூதனாக இங்கு வந்தேன்' என்று சொன்ன பிறகும் (அவனைக்) கொல்லுகின்றாயோ ? இராவணனதுபெருமையை எடுத்துக் காட்டி, 'தூதுவனைக் கொல்வது தக்கதன்று' என்று வீடணன் கூறினான் என்க. (112) |