5917. | 'பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள், பொய் தீர் வேதம் உற்றுஇயங்கு வைப்பின், வேறு வேறு இடத்து வேந்தர், மாதரைக் கொலைசெய்தார்கள் உளர் என வரினும், வந்த தூதரைக்கொன்றுளார்கள் யாவரே, தொல்லை நல்லோர் ? |
பூதலப் பரப்பின்- இப்பூமிப் பரப்பிடத்தும்; அண்டப் பொகுட்டினுள்- அண்ட கோளத்தின் உள்ளிடத்தும்,; புறத்துள் - உள்ளிடத்தும், அதன்புறமாகிய பகிரண்டத்திடத்தும்; பொய் தீர் வேதம் உற்று இயங்கு வைப்பின்- பொய்ம்மையில்லாத (சத்தியமான) வேதநெறிபொருந்தி வழங்கிவரும் உலகங்களில்; வேறு வேறு இடத்து வேந்தர் - வெவ்வேறு இடங்களில் உள்ள அரசர்களில்; மாதரைக் கொலை செய்தார்கள் உளர் எனவரினும் - மகளிரைக் கொலை செய்தவர்கள் உள்ளார் என்று சொல்லப்படுமானாலும்; தொல்லை நல்லோர் - பழமையான நீதிமான்கள்; வந்த தூதரைக் கொன்று உளார்கள் யாவர் - தம்மிடத்தில் பிறர் அனுப்ப வந்த தூதரைக் கொன்றுள்ளவர் யாரே உள்ளார் ? (ஒருவரும் இல்லை என்பதாம்); பாவங்களுள் பெண்கொலை கொடிது; அதனினும் கொடிது தூதுவனைக் கொல்லுதல் என்பதாம். (113) |