5919.

'முத் தலைஎஃகன், மற்றை முராந்தகன், முனிவன்,
                           முன்னா
அத் தலை நம்மைநோனா அமரர்க்கும்,
                           நகையிற்றாமால்;
எத் தலை உலகும்காக்கும் வேந்த ! நீ, வேற்றார்
                           ஏவ,
இத் தலைஎய்தினானைக் கொல்லுதல் இழுக்கம்;
                          இன்னும்,

     எத்து அலைஉலகம் காக்கும் வேந்த ! - மோதுகின்ற அலைகள்
நிறைந்த கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் ஆளுகின்ற அரச ! ; வேற்றார்
ஏவ இத்தலை எய்தினானை -
பகைவர் ஏவி அனுப்ப இங்குத் தூதனாய்
வந்து சேர்ந்த இவனை; நீ கொல்லுதல் இழுக்கம் - நீ கொல்வது
குற்றமுடைத்தாகும். (மேலும்); முத்தலை எஃகன் - மூன்று தலை கொண்ட
சூலாயுதத்தை உடைய சிவபெருமானும்; மற்றை முராந்தகன் - மற்று முள்ள
முரன் என்னும் அசுரனை அழித்த திருமாலும்; முனிவன் - பிரம்ம தேவனும்;
முன்னா -
முதலான; நம்மை நோனா - நம் ஆக்கத்தைக் கண்டு பொறாத;
அத்தலை அமரர்க்கும் நகையிற்று ஆம் -
அந்த வானத்தில் உள்ள
தேவர்களுக்கும் இகழ்ந்து சிரிப்பதற்கு இடமாகும்.

     'எத் தலை உலகும்காக்கும்' என்பதற்கு 'எவ்விடத்து எல்லா
உலகங்களையும் காக்கின்ற' என்று பொருள் கூறல் சிறந்ததாயின் கொள்க.
தூதரைக் கோறல் தக்கார் யார்க்கும் நகைப் புலனாம் என்ற வீடணன்,
இதனால், நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாம் என்று சொல்கின்றான்.
                                                         (115)