5920. | 'இளையவள் தன்னைக் கொல்லாது, இரு செவி மூக்கொடு ஈர்ந்து, "விளைவு உரை"என்று விட்டார், வீரர் ஆய்; மெய்ம்மை ஓர்வார்; களைதியேல் ஆவி,நம்பால் இவன் வந்து கண்ணின் கண்ட அளவு உரையாமல்செய்தி ஆதி' என்று, அமையச் சொன்னான். |
வீரர் ஆய்மெய்ம்மை ஓர்வார் - சுத்த வீரர்களாய்உண்மை நீதியை உணர்ந்த இராம இலக்குவர்கள்; இளையவள் தன்னைக் கொல்லாது - (தம்மிடம் வந்து தகாத முறையில் நடந்த) நம் தங்கை சூர்ப்பனகையைக் கொல்லாமல்; இரு செவி மூக்கொடு ஈர்ந்து விளைவு உரை என்று விட்டார் - இரண்டு காதுகளையும் மூக்கையும் அறுத்து,'இவ்விடத்துச் செய்தியை (உன்தமையனிடம் சென்று) சொல்' என்று உயிரோடு அனுப்பி விட்டார்கள்; ஆவிகளை தியேல் - (அவ்வாறிருக்க) நீ இந்தத் தூதனுடைய உயிரைப் போக்குவாயானால்; நம்பால் இவன் வந்து கண்ணில் கண்ட அளவு உரையாமல் செய்தி ஆதி - நம்மிடத்தில் 'இவன் வந்து, தனது கண்ணால் கண்ட செய்தி அளவை (அவர்களிடம் சென்று அவர்களுக்கு) உரையாதபடி செய்தனை ஆவார்'; என்று அமைய சொன்னான் - என்று (இராவணன் மனதில்) பதியும் வண்ணம் (வீடணன்) கூறினான். அனுமனைக்கொல்லாது விடுவதற்கு, சூர்ப்பணகை கொல்லப்படாமல் விடப்பட்டதை எடுத்துக்காட்டாகக் கூறி, வீடணன் தனது நீதி உரையை அமைய (பொருந்த) முடித்தான் என்க. (116) |