அரக்கர் அயன் படைநீக்கி அனுமன் வாலில் தீக் கொளுவுதல் 5922. | 'ஆய காலத்து, அயன் படையோடு இருப்ப, ஆகாது அனல் இடுதல்; தூய பாசம் எனப்பலவும் கொணர்ந்து பிணிமின் தோள்' என்னா, மேய தெய்வப்படைக்கலத்தை மீட்டான், அமரர் போர் வென்றான்; 'ஏ'எனாமுன், இடைபுக்கு, தொடை வன்கயிற்றால் பிணித்து ஈர்த்தார். |
ஆய காலத்துஅமரர் போர் வென்றான் - இவ்வாறு நிகழ்ந்த சமயத்தில், தேவர்களைப் போரில் வென்ற இந்திரசித்து; அயன் படையோடு இருப்ப அனல் இடுதல் ஆகாது - வானரம், பிரம்மாத்திரப் பிணிப்புடன் இருக்கும் போது, தீயிட்டு, அதனை எரித்தல் கூடாது, (அதனால்); தூய பாசம் என பலவும் கொணர்ந்து தோள் பிணிமின் - சிறந்த கயிறுகள் என்று சொல்லும் பலவற்றையும் கொண்டு வந்து, இதன் தோள்களை இறுகக் கட்டுங்கள்; என்னா மேய தெய்வப் படைக் கலத்தை மீட்டான் - என்று (அரக்கர்களிடம் சொல்லி) அனுமன் மீது, பாம்பு வடிவாய்ப் பொருந்தியிருந்த தெய்வத்தைன்மையுள்ள பிரமாத்திரத்தைத் தோள்களினின்று விடுவித்தான்; ஏ எனா முன் - (அக்கட்டளைப்படியே) அரக்கர்கள் ஏய் என்று ஒரு முறை சொல்லும் காலஅளவுக்குள்; இடைபுக்கு தொடைவன் கயிற்றால் - அனுமனிடம் வந்து, ஒன்றோடு ஒன்று இணைத்த கயிறுகளால்; பிணித்து ஈர்த்தார் - அனுமனைக் கட்டி இழுக்கலானார்கள். பிணி வீட்டுப்படலத்திற்கு உயிர் நிலையாக அமைந்த இந்தப் பாடலால் பிரம்மாத்திரத்தின் தெய்வத் தூய்மையும் உணர்த்தப்பட்டது. (118) |