5927.

வேந்தன்கோயில் வாயிலொடு விரைவில் கடந்து,
                             வெள்ளிடையின்
போந்து, புறம்நின்று இரைக்கின்ற பொறை தீர்
                             மறவர் புறம் சுற்ற,
ஏந்து நெடு வால்கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார்,
                             இழுது எண்ணெய்;
காந்து கடுந்தீக் கொளுத்தினார்; ஆர்த்தார்,
                            அண்டம் கடி கலங்க.

     வேந்தன்கோயில் வாயிலொடும் - (இவ்வாறாக அனுமனைக்
கயிறுகள்கொண்டு கட்டி இழுத்துக் கொண்டே) இராவணனது அரண்மனை
வாயிலை;விரைவில் கடந்து - விரைவாகக் கடந்து சென்று;
வெள்ளிடையின் போந்து-
வெட்ட வெளியை அடைந்து; புறம் நின்று
இரைக்கின்ற பொறை தீர்மறவர் -
அனுமனைச் சுற்றி எப்புறத்தும் நின்று
ஆரவாரஞ் செய்கின்றபொறுமையில்லாத அந்த அரக்கவீரர்கள்; ஏந்து
நெடுவால் புறம் சுற்ற -
எடுக்கப்படுகின்ற நீண்ட (அனுமனது) வாலில்
எப்புறமும் சூழும் படி; கிழிசுற்றி முற்றும் இழுது எண்ணெய் தோய்த்தார்
-
பலவகைச் சீலைகளைக்கொண்டு சுற்றி அவ்வால் முழுவதையும் நெய்யிலும்
எண்ணெயிலும் தோய்த்தெடுத்து; காந்து கடுந்தீ கொளுத்தினார் - (அதில்)
எரியும் கொடியநெருப்பைக் கொளுத்தி; அண்டம் கடிகலங்க ஆர்த்தார் -
அண்ட கோளம்முழுவதும் நிலைகுலையும்படிப் பெருமுழக்கமிட்டார்கள்.

      அனுமன் வாலில்அரக்கர் செய்த செயல் கூறப்பட்டது. கிழி - சீலை;
(துணி) இழுது - நெய்.                                         (123)