அனுமனுக்கு உற்றதுகேட்டுச் சானகி எரியைச் 'சுடாதே' எனல்

5930.

ஆர்த்தார், அண்டத்து அப் புறத்தும்
             அறிவிப்பார்போல்; அங்கோடு இங்கு
ஈர்த்தார்;முரசம் எற்றினார்; இடித்தார்; தெழித்தார்,
             எம் மருங்கும்
பார்த்தார்;ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார்; அவளும்
             உயிர் பதைத்தாள்;
வேர்த்தாள்;உலந்தாள்; விம்மினாள்; விழுந்தாள்;
            அழுதாள்; வெய்து உயிர்த்தாள்.

     அண்டத்துஅப்புறத்தும் அறிவிப்பார் போல் - (அரக்கர்கள்) இந்த
அண்ட கோளத்துக்கு அப்பால் உள்ள இடங்களுக்கும் இச் செய்தியைத்
தெரிவிப்பவர் போல; ஆர்த்தார் - பேரொலி எழுப்பி ஆரவாரித்தார்கள்;
அங்கொடு இங்கு ஈர்த்தார் -
அங்கும் இங்குமாக அனுமனைக் கட்டி
இழுத்தார்கள்;  முரசம் எற்றினார் - பேரிகைகளைத் தாக்கி அடித்து ஒலி
எழுப்பினார்கள்; இடித்தார் - (சிலர்) இடிமுழக்கம் போலக் கர்ச்சித்தார்கள்;
தெழித்தார் -
(சிலர்) அனுமனை அதட்டினார்கள்; எம் மருங்கும் பார்த்தார்
-
(சிலர்) எப்புறமும் அனுமனைச் சுற்றிப் பார்த்தார்கள்; ஓடி சானகிக்கும்
பகர்ந்தார் -
(சிலர்) ஓடிப் போய் அனுமனுக்கு உற்ற நிலையை, பிராட்டிக்கும்
சொன்னார்கள்; அவளும் உயிர் பதைத்தாள் - (அது கேட்ட) பிராட்டியும்
உயிர் துடித்தாள்;
 வேர்த்தாள் - உடல்வியர்த்தாள்; உலந்தாள் - (மனம்)
அழிந்தாள்; விம்மினாள் - ஏக்கமுற்றாள்; விழுந்தாள் - நிலத்தில்
சாய்ந்தாள்; அழுதாள் - வாய்விட்டு அழுதாள்; வெய்து உயிர்த்தாள் -
வெப்பமாகப் பெருமூச்சு விட்டாள்.

     அனுமனைக்கயிறுகளால் கட்டி இழுத்த அரக்கர்களது மகிழ்ச்சி
ஆரவாரிப்பும், அது கேட்ட பிராட்டியின் சோக நிலையும் உரைக்கப்பட்டன.                                           (126)