5934. | அண்டமும்கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது;-அங்கிக் குண்டமும்குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச் சண்ட வெங் கதிரஆகித் தழங்கு இருள் விழுங்கும் தா இல் மண்டலம்குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ. |
அண்டமும்கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது - அண்டங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாலுள்ள சத்திய லோகத்தவனான பிரமனது உள்ளங்கையில் உள்ள நெருப்பும் குளிர்ச்சி அடைந்தது; அங்கி குண்டமும் குளிர்ந்த - வைதிக அக்கினிக் குண்டங்களும் குளிர்ந்துவிட்டன; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த - மேகத்தின் இடையில் உள்ள இடிகள் யாவும் குளிர்ச்சியுற்றன; கொற்றம் சண்டம் வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா இ்ல் மண்டலம் குளிர்ந்த - வெற்றி பொருந்திய வலிய வெப்பம் மிகுந்த கிரணங்கள் கொண்டனவாய், முழங்கி எழும் இருளை விழுங்குகின்ற அழிவற்ற சூரிய மண்டலம் குளிர்ச்சியடைந்தது; மீளா நரகமும் குளிர்ந்த - தன் தன்மையினின்றும் மாறாத நரகத் தீயும் குளிர்ந்தது. பிராட்டியின்பிரார்த்தனைக்கு இரங்கி, எங்கும் உள்ள அக்கினிகளும் தம் கொடுமை நீங்கி அனுதாபம் காட்டலாயின என்பது கருத்து. (130) |