5935. | வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி, வெந் தீ நிற்பினும் சுடாதுநின்ற நீர்மையை நினைவின் நோக்கி, அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், 'சனகன் பாவை கற்பினால்இயன்றது' என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான். |
அற்பின் நார்அறாத சிந்தை அனுமனும் - (சீதாராமர்கள்பக்கல்) தான் கொண்டுள்ள பக்தியாகிய பற்று நீங்காத மனத்தை உடைய அனுமனும்; வெம் தீ - அந்தக் கொடிய நெருப்பு; வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி நிற்பினும் - மலையால் அமைக்கப்பட்டது போன்ற தனது உடலை முழுவதும் கவர்ந்து நின்று எரித்தாலும்; சுடாது நின்ற நீர்மையை நினைவின் நோக்கி - தன்னைச் சுடாது குளிர்ச்சியோடு விளங்கிய தன்மையை தன் மனத்தால் நன்கு ஆராய்ந்து உணர்ந்து; சனகன் பாவை கற்பினால் இயன்றது - 'சனகனின் மகளாகிய சானகியின் கற்பின் சிறப்பால் ஆனது (இது)'; என்பான் - என்று தீர்மானித்தவனாகி; பெரியது ஓர் களிப்பன் ஆனான் - ஒப்பற்ற பெருங்களிப்பை உடையவன் ஆனான். நெருப்பு தன்னைச்சுடாமல் இருப்பதற்குக் காரணம் பிராட்டியின் கற்புச் சிறப்பே என்று உணர்ந்து அனுமன் மகிழ்ந்தனன் என்க. (131) |