அனுமன் இலங்கைநகர் முழுதும் காணுதல் 

5936.

அற்றை அவ்இரவில், தான் தன் அறிவினால்
                          முழுதும் உன்னப்
பெற்றிலன்எனினும், ஆண்டு, ஒன்று உள்ளது பிழை
                          உறாமே,
மற்று உறு பொறிமுன் செல்ல, மறைந்து செல்
                         அறிவு மான,
கற்றிலாஅரக்கர் தாமே காட்டலின், தெரிய,
                          கண்டான்.

     தான் - அந்த அனுமன்தான்;அற்றை அ இரவில் - பிராட்டியைக்
காண ஊர் தேடி வந்த அன்றைத் தினத்து முன்னிரவிலே; தன் அறிவினால்
முழுதும்
உன்ன பெற்றிலன்எனினும் - தன் அறிவைக் கொண்டுநகர்ப்
பகுதிகள்முழுவதையும் ஊன்றி அறியப் பெற்றிலனாயினும்; ஆண்டு உள்ளது
ஒன்றுபிழை
உறாமே - அந்நகரத்தில் உள்ளஇடம் ஒன்றேனும், தவறாமல்;
கற்றிலா அரக்கர் தாமே காட்டலின் - கற்றறிவில்லா (மூடர்களான) அந்த
அரக்கர்கள்தாங்களே எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு சென்றதனால்;
மற்று உறுபொறி முன் செல்ல -
புறத் துறுப்பாய்ப் பொருந்திய பொறிகள்
(பொருள்களினிடத்து) முன்னே செல்ல; மறைந்து செல் அறிவுமான -
(அவற்றின் பின்னே) மறைவாகச் செல்கின்ற அறிவை ஒப்ப; தெரிய கண்டான்
-
நன்றாகப் பார்த்தான்.

     பிராட்டியைத்தேடி, இலங்கை நகரில் அன்றைய இரவில் அலைந்த
போது காணாத இடங்களை எல்லாம் இன்று அரக்கர் செயலால் அனுமன்
கண்டான் என்க. இதற்கு, பொறிகளின் வழி மன அறிவு புலன் வழிச் சென்று
யாவும் அறிதல் உவமையாக்கப்பட்டது.                          (132)