5940. | அப்பு உறழ்வேலைகாறும் அலங்கு பேர் இலங்கைதன்னை, எப் புறத்துஅளவும் தீய, ஒரு கணத்து எரித்த கொட்பால், துப்பு உறழ் மேனிஅண்ணல், மேரு வில் குழைய, தோளால் முப்புரத்து எய்தகோலே ஒத்தது-அம் மூரிப் போர் வால். |
அப்பு உறழ் வேலைகாறும் அலங்கு பேர் இலங்கை தன்னை - நீர்மிக்க கடல் வரை விளங்கும் பெரிய இலங்கை நகரை,; எப்புறத்து அளவும்தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் - எல்லாப் பக்கங்களின் எல்லைவரையிலும் எரிந்து போக ஒரு கண நேரத்தில் எரித்த திறமையால்; அம்மூரிபோர்வால் - அனுமனுடைய அந்த வலிய போர்த்திறம் உள்ளவாலானது;துப்பு உறழ் மேனி அண்ணல் -பவழம்போல் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான்; மேருவில் குழைய - மேரு மலையாகிய வில் வளைய; தோளால் - தனது தோள் வலியால்; முப்புரத்து எய்த கோலே ஒத்தது - திரிபுரங்களின் மீது தூண்டிய (திருமாலாகிய) அம்பே போன்றிருந்தது. அனுமன் வாலுக்கு,முப்புரம் எரித்த அம்பு உவமை ஆயிற்று. 'முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்' என்ற பட்டினத்தார் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. அனுமன், சிவபிரான் அமிசம் என்பது உறுதிப்படுகின்றது. (136) |