5941.

வெள்ளியின் பொன்னின், நானா விளங்கு பல்
                          மணியின், விஞ்சை
தெள்ளியகடவுள்-தச்சன் கை முயன்று அரிதின்
                          செய்த
தள்ள அருமனைகள்தோறும், முறை முறை தாவிச்
                         சென்றான்;
ஒள் எரியோடும்,குன்றத்து ஊழி வீழ் உருமொடு
                          ஒத்தான்.

     வெள்ளியின்பொன்னின் நானா விளங்கு பல் மணியின் -
வெள்ளியாலும் தங்கத்தாலும், பலவகைப்பட்ட பிரகாசிக்கின்ற அழகிய
இரத்தினங்களாலும்; விஞ்சை தெள்ளிய கடவுள் தச்சன் - சிற்பக்கலையில்
தேர்ந்தவனாகிய தெய்வத் தச்சனான் விசுவகர்மன்; கை முயன்று அரிதின்
செய்த -
தன் கைவன்மையால் முயற்சி செய்து அருமையாக அமைத்த; தள்ள
அரு மனைகள் தோறும் -
அழித்தற்கு அருமையான மாளிகைகளில்
எல்லாம்; ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் -
ஒள்ளிய நெருப்புடனே மலையின் மீது கற்பாந்த காலத்தில் விழுகின்ற
பேரிடியைப் போன்றவனாய்; முறை முறை தாவிச் சென்றான் - வரிசையாகத்
தாவித் தாவித் தீயை வைத்துக் கொண்டு செல்வானாயினான்.

     இலங்கை நகரத்துமாளிகைகளுக்கு மலைகளும், தன் வாலின்
நெருப்போடு பாயும் அனுமனுக்கு நெருப்புடன் வீழும் இடியும் உவமைகளாக
வந்தன. கை முயலுதல் - செய்வதறிந்து செய்தல்.                  (137)