5944.

வாசல்இட்ட எரி மணி மாளிகை
மூச முட்டி, முழுதும்முருக்கலால்,-
ஊசலிட்டென ஓடி,உலைந்து உளை
பூசலிட்ட-இரியல்புரம் எலாம்.

     வாசல் இட்ட எரி- மாளிகையின் வாயிலில் அனுமனால்
பற்றவைக்கப்பட்ட நெருப்பு; மணி மாளிகை மூச முட்டி - அழகிய
மாளிகையை மொய்த்தாற் போலச் சூழ்ந்து தாக்கி; முழுதும் முருக்கலால் -
முழுவதையும் எரித்து அழித்ததனால்; இரியல் புரம் எலாம் - நிலை தளர்ந்த
அந் நகரத்து மக்கள் எல்லாம்; ஊசல்
 இட்டு என ஓடி - ஊஞ்சல் ஆடுவது
போல் (போகும்வழி அறியாது) இங்கும் ஆங்குமாக ஓடி; உலைந்து உளை
பூசல் இட்ட -
வருந்தி வருத்தத்தினாலாகும் பேரொலியை உண்டாக்கினர்.z

     மாளிகைகள்முழுவதும் எரிந்து அழிந்ததனால், அந்நகரத்து மக்கள்
அச்சத்தால் விரைந்து வெளியேறி ஓடுவதும், தமது பொருளை நினைந்து மீள
நகரினுள் வருவதுமாய் இருத்தலால் 'ஊசல் இட்ட என ஓடி' எனக்
கூறப்பட்டது. ஊசல் இட்டு மகிழ வேண்டிய மாளிகையில் மக்கள் ஊசல்
போல அலைந்து திரிந்தனர் என்பது குறிப்பு. 'புரம்' என்பது இட ஆகு
பெயராய் நின்று நகரத்து மக்களைக் காட்டிற்று. உளை பூசல் - வருந்தி
அழைக்கும் கூப்பாடு.                                         (2)