5946. | வானகத்தைநெடும் புகை மாய்த்தலால், போன திக்குஅறியாது புலம்பினார்- தேன் அகத்தமலர் பல சிந்திய கானகத்து மயில்அன்ன காட்சியார் |
தேன் அகத்தமலர் பல சிந்திய - தேனைத் தன்னுள்ளேஅடக்கிய பலவகையான மலர்கள் சிதறி விழப்பெற்ற; கானகத்து மயில் அன்னகாட்சியார் - காட்டிலே (தம்விருப்பின்படி விளையாடுகின்ற) மயில் போன்ற சாயலை உடைய மகளிர்கள்; நெடும் புகை - நெடுந்தூரம் பரந்த புகை; வானகத்தை மாய்த்தலால் - ஆகாயத்தை மறைத்ததனால்; போனதிக்கு அறியாது - (தம் கணவர் உயர எழுந்து) போன திசையைத் தாம்இன்னதென்று உணராமல்; புலம்பினார் - வாய்விட்டு அழுவாராயினார். வானையும் மறைத்தபுகையில், தம் கணவர் உய்ந்து போன திசை தெரியாது மகளிர்கள் வருந்தினர் என்க. மாய்த்தல் - மறைத்தல். (4) |