5947.

கூய்,கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
மீச்சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்ததன்மையினால், எரி இன்மையும்,
தீக்கொளுந்தினவும், தெரிகின்றிலார்.

     வீரரும் மாதரும்- அரக்கவீரர்களும் மகளிரும்; கூய் -
(எரிபற்றியதனால்) பேராரவாரம் செய்து; குஞ்சியில் கூந்தலில் - தம்மைச்
சார்ந்தவரின் தலைமயிரில்; கொழும் புனல் - மிக்க நீரை; மீ சொரிந்தனர் -
மேலே ஊற்றுவாராயினர்; ஏய்த்த தன்மையினால் - (அங்ஙனமாகியும்,
தம்மவரின் செம்பட்டை மயிரும் நெருப்பும்) நிறத்தில் ஒத்திருக்கின்ற
இயல்பினால்,; எரி இன்மையும் - (தலைமயிர்களில்) நெருப்பு இல்லாமையும்;
தீ கொளுந்தினவும் - நெருப்புப் பற்றினவற்றையும்; தெரிகின்றிலார் -
வேறுபாடு அறியாதவராக இருந்தார்கள்.

     சில அரக்கர்,தம்மைச் சேர்ந்த ஆடவர் மகளிரின் தலைமயிரில்
நெருப்புப் பிடிக்கவே, கூவி, அவர்கள் தலையில் நீரை ஊற்றியும், எரி
அவிந்ததா, அவிய வில்லையா என்று தெரியாதவராயிருந்தனர். அவர்களது
தலை மயிர் செம்பட்டையாதலின், நெருப்புக்கும் அதற்கும் வேறுபாடு
தெரியவில்லை என்க.                                         (5)