தீயும் புகையும்ஓங்கிப் பரவுதல்

5948.

இல்லில்தங்கு வயங்கு எரி யாவையும்,
சொல்லின் தீர்ந்தன போல்வன, தொல் உருப்
புல்லிக்கொண்டன-மாயைப் புணர்ப்பு அறக்
கல்லி, தம்இயல்பு எய்தும் கருத்தர்போல்.

    மாயைபுணர்ப்பு அற கல்லி - மாயையின் கலப்பு நீங்க, (அதனைத்
தமது ஞானத்தால்) களைந்து; தம் இயல்பு எய்தும் - தமது இயல்பான
(ஆத்மஞான) நிலையை அமையும்; கருத்தர் போல் - நோக்கமுடைய
மேலோர் போல; இல்லில் தங்கும் வயங்கு எரி யாவையும் - அரக்கர்களது
வீடுகளில் தங்கியிருந்த எரிகின்ற நெருப்புகளெல்லாம்; சொல்லில் தீர்ந்தன
போல்வன -
இராவணனது கட்டளைச் சொல்லினின்று விடுபட்டன
போல்பவையாய்; தொல் உரு புல்லிக் கொண்டன - தமது தொன்மையான
உருவைத் தழுவிக் கொண்டு விட்டன.

     இராவணனுக்குஅஞ்சி, இலங்கை நகரில் அரக்கர்களுக்குப் பயன்படும்
அளவில், அது வரை கட்டுப்பட்டிருந்த நெருப்புகள், (அக்கினி தேவன்)
இப்போது, இராவணன் ஆணையை, மீறி, அனுமன் வைத்த நெருப்புடன் ஒன்று
பட்டுத் தமது பழைய உருவத்தை அடைந்து விட்டன. இது, மாயைப்புணர்ப்பு
அற்ற ஆன்மா, தமது உண்மை நிலையை அடைந்தது போல இருந்தது என்க.
சொல் - கட்டளை. தொல் உரு - கட்டுப்பாட்டுக்கு முன் இருந்த உருவம்;
மாயை - உண்மை நிலையை அறிய முடியாது ஆன்மாவைக் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கும் ஒரு ஆற்றல்; புணர்ப்பு - கலப்பு; தம் - இங்கு ஆன்மாவைச்
சுட்டியது.                                                   (6)