5949.

ஆயது அங்குஓர் குறள் உரு ஆய், அடித்
தாய் அளந்து,உலகங்கள் தரக் கொள்வான்,
மீ எழுந்தகரியவன் மேனியின்,
போய் எழுந்துபரந்தது-வெம் புகை.

     அங்கு ஓர் -அக்காலத்தில், முதலில் ஒரு; குறள் உரு ஆய் -
வாமனவடிவாகச் சென்று; தர - (மாவலி தனக்குக்) கொடுக்க; உலகங்கள்
அடி தாய் அளந்து கொள்வான் -
மூவுலகங்களையும், தன் அடிகளால் தாவி
அளந்து கொள்ளும் பொருட்டு; மீ எழுந்த கரியவன் மேனியின் -
மேலோங்கி வளர்ந்த கருநிறம் உடைய திருமாலின் திரு மேனியைப் போல;
வெம் புகை எழுந்து போய் பரந்தது ஆயது - வெப்பமான புகை, மேல்
எழுந்து சென்று எங்கும் பரந்ததாக ஆயிற்று.

     மேல் எழுந்தகரும்புகை, உலகம் அளக்க எழுந்த திரிவிக்கிரமனான
திருமாலைப் போல ஆயிற்று என்க. நிறத்தாலும், மேல் எழுதலாலும்
வெம்புகை, திருமாலை ஒத்திருந்தது.                             (7)