5954. | உரையின்முந்து உலகு உண்ணும் எரிஅதால், வரை நிவந்தனபல் மணி மாளிகை நிரையும் நீள்நெடுஞ் சோலையும் நிற்குமோ ? தரையும் வெந்தது,பொன் எனும் தன்மையால். |
உரையின்முந்து உலகு உண்ணும் எரி அதால் - (சான்றோர்) சுடுமொழியினும் விரைவாக உலகை அழிக்கக் கூடிய நெருப்பானமையால்; வரை நிவந்தன பல் மணி மாளிகை நிரையும் - மலை போல் உயர்ந்த பல மணிகளால் இயன்ற மாளிகைகளின் வரிசைகளோடும்; நீள் நெடும் சோலையும் - நீண்டுயர்ந்த சோலைகளோடும்; நிற்குமோ - எரிந்து நிற்குமோ? (நில்லாது); பொன் எனும் தன்மையால் தரையும் வெந்தது - (அவைநின்ற) நிலமும் பொன் மயமாக இருத்தலினால் வெந்து உருகிவிட்டது. இலங்காபுரியிலுள்ள மாளிகையின் தளவரிசைகள் பொன்மயமானதால், சோலைகள் எரியும் போதே, தரையும் வெந்து அழிந்தது. (12) |