5970. | வரையினைப்புரை மாடங்கள் எரி புக, மகளிர், புரை இல் பொன்கலன் வில்லிட விசும்பிடைப் போவார், கரை இல் நுண்புகைப் படலையில் கரந்தனர்; கலிங்கத் திரையினுள்பொலி சித்திரப் பாவையின் செயலார். |
வரையினை புரைமாடங்கள் எரி புக - மலையை ஒத்த மிகப் பெரியமாளிகைகளில் நெருப்புப் பற்றிக் கொள்ள; மகளிர் - அங்கிருந்த அரக்கமாதர்கள்; புரை இல் பொன் கலன் வில்லிட - குற்றமற்ற அழகிய பொன்மயமான தமது ஆபரணங்கள் ஒளி வீச; விசும்பிடை போவார் - வானத்தில் எழுந்து சென்றவர்களாய்; கரை இல் நுண் புகை படலையில் கரந்தனர் - அளவு இல்லாத நுண்ணிய புகையின் திரளிலே மறைந்தார்கள்; (அதனால், அவர்கள்) கலிங்கம் திரையினுள் பொலி சித்திரம் பாவையின் செயலார் - கலிங்க நாட்டில் நெய்த துணித் திரையின் உள்ளே விளங்குகின்ற அழகிய பதுமையின் செயலை அடைந்தவர்களாயினர். நுண்புகைத்தொகுதிக்கு, கலிங்கத்திரையும், அழகிய மகளிர்க்கு சித்திரப் பதுமையும் உவமைகள். கலிங்கத்திரை - கலிங்க நாட்டுத் துணியால் ஆன திரைச் சேலை. பாவை - பெண் போன்ற ஓவியம். (28) |