5972.

மினைப்பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம்
                            விழுங்கி,
நினைவு அரும்பெருந் திசை உற விரிகின்ற
                            நிலையால்,
சினைப்பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங்
கனல் பரந்தவும்,தெரிகில-கற்பகக் கானம்.

     மினை பரந்து எழுகொழும் சுடர் - மின்னலைப் போல ஒளிபரவி
எழும் செழுமையான அனல் கொழுந்து; உலகு எலாம் விழுங்கி - உலகம்
முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டு; நினைப்பு அரும் பெரும் திசை
உற -
நினைப்பதற்கு அரிய பெரிய திசைகளைப் போய் அடைய; விரிகின்ற
நிலையால் -
பரந்து விளங்கும் தன்மையால்; கற்பகம் கானம் வெங்கனல்
பரந்த சிலவும் -
கற்பகச் சோலைகள் கொடிய நெருப்புப் பற்றி எரிகின்றவை
இவை சில என்றும்; சினை பரந்து எரி சேர்ந்திலா நின்ற சிலவும் -
கிளைகளில் தாவி நெருப்புப் பற்றாது நின்றவை இவை சில என்றும்; தெரிகில
-
வேறுபாடு அறிய வொண்ணாதனவாயிருந்தன.

     இலங்கையில் இருந்தகற்பகச் சோலைகள் இயற்கையில்
ஒளியுடைமையால்அனுமன் இட்ட தீயால் எரிந்தவை இவை என்றும்
எரியாதவை இவை என்றும்அறிந்து கொள்ள முடியாதபடி விளங்கின
என்பதாம். போந்து - போல;சினைப் பரந்து- கிளைகளில் தாவி.      (30)