5974.

மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளியங்கிரியும்,
ஒக்க,வெற்பினோடு; அன்னமும் காக்கையின் உருவ;
பக்க வேலையின்படியது, பாற்கடல்; முடிவில்
திக்கயங்களும்கயங்களும் வேற்றுமை தெரியா.

     மிக்க வெம் புகைவிழுங்கலின் - மிகுதியான கொடிய புகைஉலகம்
எங்கும் கவிழ்ந்து கொண்டமையால்; வெள்ளி அம் கிரியும் வெற்பினோடு
ஒக்க -
வெள்ளிய அழகிய கைலைமலையும் ஏனைய மலைகளைப் போலக்
கருநிறம் பெற்றது; அன்னமும் காக்கையின் உருவ - வெள்ளை அன்னமும்
காக்கையின் கருநிறத்ததாயிற்று; பாற்கடல் பக்க வேலையின் படியது -
வெண்மையான பாற்கடலும் அருகில் உள்ள கடலின் தன்மையாய்
கருங்கடலாயிற்று; முடிவில் திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா
-
எல்லைக் கோடியில் உள்ள ஐராவதம் முதலிய (வெண்ணிறமான)
திசையானைகளுக்கும் ஏனைய கருநிறயானைகளுக்கும் வேறுபாடு
தெரியாததாயிற்று.

     புகை சூழ்ந்த பின்னர்,இயற்கையாக வெண்ணிறமாய் உள்ள சிறந்தவை
அனைத்தும் கருநிறத்ததாயின என்பதாம்.                        (32)