படைக்கலச்சாலையின் அழிவு 5977. | வில்லும், வேலும், வெங் குந்தமும் முதலிய விறகாய் எல்லுடைச் சுடர்எனப் புகர் எஃகு எலாம் உருகி, தொல்லை நல்நிலை தொடர்ந்த, பேர் உணர்வு அன்ன தொழிலால் சில்லி உண்டையின் திரண்டன படைக்கலச் சாலை. |
படைக்கலச் சாலை- ஆயுதசாலைகளில் உள்ள; வில்லும், வேலும், வெம் குந்தமும் முதலிய விறகாய் - விற்களும் வேல்களும் கொடிய எறி ஈட்டிகளும் முதலியவற்றில் இருந்த மரப்பகுதிகள் விறகுகளாய் அமைய; எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் - ஒளியை உடைய சூரியன் என்னும்படி காந்தியுள்ள மற்றைய ஆயுத வடிவம் பெற்ற இரும்புகள் எல்லாம்; உருகி - அத்தீயில் உருகி; தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வுஅன்ன தொழிலால் - தமது பழைய நல்ல உயர் நிலையை நாடிச் சென்றபெரிய ஆத்ம ஞானம் போன்ற செயல் பெற்று; சில்லி உண்டையின் திரண்டன - சிறு உருண்டையாகத் திரண்டு கிடந்தன. தனித்தனி ஆயுதவடிவில் இருந்த இரும்புகள் அனைத்தும், நெருப்பில் உருகி, ஒன்றாகச் சேர்ந்து, ஒரு சிறு உருண்டையாயிற்று என்பது கருத்து. இதனை விளக்க வந்த உவமை தத்துவக் கருத்தைத் தாங்கியது. ஒரு திரளிலிருந்து பல் வேறு வகையாகப் பிரிந்து, தனிப்பட்டு நின்ற பிராணிகள் மீளவும் ஒற்றுமை கொண்டு ஒருங்கு சேர்தல் ஆத்ம ஞானச் செயல் எனப்படும். ஆயுதங்களின் தொல்லை நிலை இரும்பு. அனுமன் இட்ட தீயால், அவை உருகியதும் பழைய இரும்புத் துண்டாகத் திரண்டன. ஆத்ம ஞான உணர்வு தோன்றுவதற்கு முன்பு பல்வேறுபட்ட தோற்றம்; அவ்வுணர்வுக்குப் பின்பு, எல்லா வேற்றுமையும் மறைந்து ஒன்றாகவே காண்பது. இது, தொல்லை நல்நிலை தொடர்ந்த பேர் உணர்வு எனப்பட்டது. (35) |