யானைகள் ஓடல் 

5978.

செய்தொடர்க் கன வல்லியும், புரசையும், சிந்தி,
நொய்தின்,இட்ட வன் தறி பறித்து, உடல் எரி
                                  நுழைய,
மொய் தடச்செவி நிறுத்தி, வால் முதுகினில்
                                  முறுக்கி,
கை எடுத்துஅழைத்து ஓடின-ஓடை வெங் களி மா.

     ஓடை வெம் களிமா- நெற்றிப் பட்டம் அணிந்த கொடிய யானைகள்;
உடல் எரி நுழைய -
தமது உடலில் நெருப்புப் புகுந்து எரிய; தொடர் செய்
கன வல்லியும் -
சங்கிலியாகச் செய்யப்பட்ட கனமான பூட்டு விலங்கையும்;
புரோசையும் சிந்தி -
கழுத்தில் இடப்பட்ட கயிற்றையும் சிதறவிட்டு; இட்ட
வல் தறி நொய்தின் பறித்து -
தம்மைக் கட்டியிருந்த வலிய தூண்களை
எளிதில் பிடுங்கி எறிந்துவிட்டு; மொய் தட செவி நிறுத்தி - வலிய அகன்ற
தமது காதுகளை மேலே தூக்கி நிறுத்தி; வால் முதுகினில் முறுக்கி - வாலை
முதுகின் மேல் முறுக்கி நீட்டி; கை எடுத்து அழைத்து ஓடின - தமது
துதிக்கையைத் தூக்கி, வாய்விட்டுக் கதறிக் கொண்டு பயந்து ஓடின.

     தீ, பற்றியயானைகளின் செயல்கள் கூறப்பட்டன. தொடர் - சங்கிலி;
பலகரணைகள் ஒன்றாகத் தொடுக்கப்பட்டமையால் தொடர் எனப்பட்டது. (36)