பறவைகள் கடலில்வீழ்ந்து மாய்தல்

5979.

வெருளும் வெம் புகைப் படலையின் மேற்செல
                            வெருவி,                    
இருளும் வெங்கடல் விழுந்தன, எழுந்தில, பறவை;
மருளின் மீன்கணம் விழுங்கிட, உலந்தன-மனத்து      
                            ஓர்
அருள் இல்வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தவர்
                            அனைய.

     மனத்து ஓர்அருள்இல்வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர்
அனைய -
தம் மனத்தில் அருள் என்பது சிறிதும் இல்லாத வஞ்சகர்களைத்
தமக்கு அடைக்கலமாகக் கருதிச் சரண்
 அடைந்தவர்களைப்போல; பறவை
வெருளும் வெம் புகை படலையின் மேல் செல வெருவி -
பறவைகள்
அச்சத்தை உண்டாக்கும் கொடிய புகைக் கூட்டத்தைக் கடந்து அப்பால் செல்ல
அஞ்சினவைகளாய்; இருளும் வெங்கடல் விழுந்தன - கருநிறம் கொண்ட
கொடிய கடலில் விழுந்து; எழுந்தில - மேற்கிளப்ப முடியாது; மருளின் மீன்
கணம் விழுங்கிட -
அஞ்ச வேண்டிய அப் பறவைகளுக்கு அஞ்சுதல்
இல்லாத மீன் கூட்டம் விழுங்க இறந்து அழிந்தன.

     பகைவர்க்குப்பயந்து ஓடி வஞ்சகரைச் சரணம் அடைந்தவர், புகைக்குப்
பயந்து கடலில் விழுந்த பறவைகளுக்கும், வஞ்சகர்கள் கடலுக்கும்
மீன்களுக்கும் உவமைகள். 'பிறரிடம் அச்சம் கொண்டு வஞ்சரைத் தஞ்சம்
அடைபவர், அவரால் பாதுகாக்கப் படாததோடன்றிதம் நலம் கருதி ஒழிக்கவும்
படுவர்' என்ற உண்மை உணர்த்தப்பட்டது.                       (37)