5981. | வான மாதரும், மற்றுள மகளிரும், மறுகிப் போன போன திக்கு அறிகிலர், அனைவரும் போனார்; ஏனை நின்றவர்எங்கணும் இரிந்தனர்; இலங்கைக் கோன் அவ்வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைந்தார். |
வான மாதரும் -இராவணன்மாளிகையில் இருந்த தேவ மகளிரும்; மற்றுள மகளிரும் - மற்றும் உள்ள (இயக்க கந்தருவ வித்தியாதரர் முதலான) பெண்களும்; அனைவரும் மறுகி - எல்லோரும் கலங்கி; போன போன திக்கு அறிகிலர் போனார் - அவரவர் போன திசை இன்னது என்று அறியாதவர்களாய் நிலை கெட்டுச் சென்றனர்; ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் - மற்றும் ஓடாமல் நின்றவர்கள் எங்கும் சுற்றித் திரிந்தவர்களாய்; இலங்கை கோன் - இலங்கைக்கு அரசனான இராவணன்; அவ்வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் - அந்தத் தேவர்களது தலைநகராகிய அமராவதியைப் பற்றிக் கொண்ட நாள் போல நிலை குலைந்தார்கள். இராவணனதுமாளிகையைத் தீப்பற்றிய போது அங்கிருந்தவர்கள், பயந்து ஓடியது பற்றிக் கூறப்பட்டது. மேக நாதன் செயல் தகப்பன் இராவணன் மேல் ஏற்றிக் கூறப்பட்டது. (39) |