இராவணன்முதலியோர் வெளியேறுதல் 

5985.

அனையகாலையில் அரக்கனும், அரிவையர் குழுவும்,
புனை மணிப்பொலி புட்பக விமானத்துப் போனார்;
நினையும்மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும்
வினை இலாமையின், வெந்தது, அவ் விலங்கல்மேல்
                                    இலங்கை.

     அனைய காலையில்- அவ்வாறுஇராவணன் மனை வேகின்ற
அப்பொழுது;  அரக்கனும், அரிவையர் குழுவும் - தலைமை அரக்கனாகிய
இராவணனும், அவனது உரிமை மகளிர் கூட்டமும்; மணி புனை பொலி
புட்பக விமானத்து போனார் -
இரத்தினங்களால் அமைக்கப்பெற்று
விளங்குகின்ற புட்பக விமானத்தில் ஏறி மேலே சென்றனர்; யாவரும் -
இறந்தவர் போக மற்றைய அரக்கர்களும்; நினையும் மாத்திரை நீங்கினர் -
நினைத்த அளவில் அவ்விடம் விட்டு அகன்றனர்; நினையும் வினை
இலாமையின் -
அவ்வாறு நினைக்கும் செயலைச் செய்யும் தன்மை தனக்கு
இல்லாததால்; அவ்விலங்கல் மேல் இலங்கை வெந்தது - அந்த மலையின்
மீது இருந்த இலங்கை நகர் வெந்து அழிந்தது.

     நினைத்ததைச்செய்யக் கூடியவர்கள் அரக்கர்கள். அஃறிணைப்
பொருளாகிய இலங்கைநகர் அவ்வாறு செய்ய முடியாததால் நெருப்பில் வெந்து
அழிந்தது என்பது கருத்து. நினையும் மாத்திரை - மிகச் சுருங்கிய காலம்;
புட்பக விமானம் - இராவணனது வானவூர்தி.                     (43)