5988. | 'இன்று புன்தொழில் குரங்குதன் வலியினால், இலங்கை நின்று வெந்து,மா நீறு எழுகின்றது; நெருப்புத் தின்றுதேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்; நன்று ! நன்று! போர் வலி' என, இராவணன் நக்கான். |
இன்று - இன்றைக்கு; புன் தொழில் குரங்கு தன் வலியினால் - அற்பத் தொழிலை உடைய (ஒரு) குரங்கினது வலிமையினால்; இலங்கை நின்று வெந்து மாநீறு எழுகின்றது - இலங்கை நகர் நின்று எரிந்து பெருஞ் சாம்பல் பறக்கின்றதாயிற்று; நெருப்பு தின்று தேக்கிடுகின்றது - நெருப்பு நகரத்தை உண்டு ஏப்பம் விடுவதாயிற்று; தேவர் சிரிப்பார் - (இதனைக் கண்டால், நமக்குத் தோற்றுவலி இழந்த) தேவர்களும் நகைப்பார்கள்; போர் வலி நன்று நன்று என - தமது போர்த்திறமை மிக நன்றாக இருக்கிளது என்று சொல்லி; இராவணன் நக்கான் - இராவணன் (வெகுளி மேலீட்டால்) சிரித்தான். இலங்கைஎரியுண்டதற்கு, இராவணன் நாணம் தோன்ற, கோபத்தோடு நக்கான் என்க. தேக்கிடுதல் - நிறைந்து ஏப்பம் விடுதல். 'தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான்' என்ற திருவாய் மொழித் தொடர் (2.1.3) விளக்கத்துக்கு 'செந்தீ உண்டு தேக்கிட்டதே' என்று மேற்கோள் காட்டப்பெற்றுள்ளது. (46) |