6004.

வந்தவர்சொல்ல மகிழ்ந்தான்;                    
வெந் திறல்வீரன் வியந்தான்;
'உய்ந்தனென்'என்ன, உயர்ந்தான்,
பைந்தொடிதாள்கள் பணிந்தான்.

     வந்தவர் சொல்ல- (வானத்தில்) வந்தவர்களான வித்தியாதரர்
இவ்வாறுசொல்ல; வெம் திறல் வீரன் - (அது கேட்டு) ஆண்மை மிக்க
வீரனானஅனுமன்; மகிழ்ந்தான் - மகிழ்ச்சி கொண்டு; வியந்தான் -
வியப்படைந்து;உய்ந்தனன் என்ன உயர்ந்தான் - (தீ வினையினின்று யான்)
தப்பினேன்என்று எண்ணி, அவ்விடம் விட்டு மேலே எழுந்தவனாகிச் சென்று;
பைந்தொடி தாள்கள் பணிந்தான் - பசுமையான பொன் வளையல்களை
அணிந்தபிராட்டியின் திருவடிகளில் பணிந்து வணங்கினான்.

     தான் இட்டதீயினால், அசோகவனத்துக்கோ, பிராட்டிக்கோ, துன்பம்
எதுவும் நேரவில்லை என்பதை வித்தியாதரர் பேசிக் கொண்ட பேச்சின் மூலம்
அறிந்த அனுமன், உய்ந்தனன் என மகிழ்ந்தான். பிராட்டி தீப்பற்றி
இறந்திருந்தால் அது தனக்குப் பெரும் பழியாகி விடுமே என்று பயந்து
கொண்டிருந்தான் அனுமன் என்பதை, 'உய்ந்தனன், என்ற தொடர் உணர
வைக்கின்றது. முதல் நூலில் விரிவாகச் சொல்லிக்காட்டப்பட்ட அனுமனது
அச்சம் நிறைந்த எண்ணம் 'உய்ந்தனன்' என்ற ஒருதொடரில் சுருக்கிக்
காட்டப்பட்டுள்ளது. இது 'சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்' என்ற உத்திக்கு
இலக்கணமாக அமைந்துள்ளது என்னலாம்.                         (62)