6008.

மைந்நாகம்என்ன நின்ற குன்றையும், மரபின் எய்தி,
கைந் நாகம்அனையோன் உற்றது உணர்த்தினன்,
                           கணத்தின் காலை,
பைந் நாகம்நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு
                            பார்க்கும்,
கொய்ந் நாகம்நறுந் தேன் சிந்தும், குன்றிடைக்
                          குதியும் கொண்டான்.

     கை நாகம்அனையோன் - துதிக்கையை உடைய யானை
போன்றவனான அனுமன்; மைநாகம் என்ன நின்ற குன்றையும் - மை நாகம்
என்று சொல்லப் படுகின்ற இடை நின்ற மலையையும்; மரபின் எய்தி உற்றது
உணர்த்தினன் -
(முன் அதனிடம் சொல்லி வந்த) முறைப்படி அடைந்து,
இலங்கையில் நடந்த நிகழ்ச்சிகளை அதனிடம் கூறி; கணத்தின் காலை தன்
நெடும் வரவு பார்க்கும் -
ஒரு கணப் பொழுதிலே, நெடு நேரமாகத் தனது
வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; பை நாகம் நிகர்க்கும் - படம்
எடுத்து எழுந்து நோக்கும் பாம்பு போன்ற; வீரர் - அங்கதன் முதலிய
வானரவீரர்கள் நின்ற; கொய் நாகம் நறுந்தேன் சிந்தும் குன்றிடை -
பறித்துஎடுக்கக் கூடிய சுர புன்னை மரங்களின் மலர்கள்
 தேனைச்
சிந்திக்கொண்டிருக்கும் மகேந்திரமலையிலே; குதியும் கொண்டான்
-
குதித்தலையுஞ் செய்தான்.

     பாம்பு, ஒன்றைஆவலோடு எதிர் பார்க்கும் போது, படம் எடுத்துக்
கொண்டு எழுந்து நோக்கும் இயல்புடையது. அதனால் வானர வீரர்கள்
அனுமனது வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதற்கு, பை நாகம்
உவமையாக்கப்பட்டது. கணத்தின் காலை   - காலத்தின் சிறிய அளவு; நாகம்
- சுரபுன்னை. அனுமன், கடல் தாவிய செய்தி, ஒரு நீண்ட படலமாக விரிந்தது.
ஆனால் அவன் திரும்பிய செய்தி இரண்டு பாடல்களில் முடிக்கப்பட்டுள்ளது.
இது, கவிச்சக்கரவர்த்தியின் கதை அமைப்புத் திறனைக்காட்டுகின்றது.     (2)