6010.

அழுதனர்சிலவர்; முன் நின்று ஆர்த்தனர் சிலவர்;
                           அண்மித்
தொழுதனர்சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்;
                          அள்ளி
முழுதுறவிழுங்குவார்போல் மொய்த்தனர் சிலவர்;
                           முற்றும்
தழுவினர்சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர்,
                           தாங்கி.

     சிலவர் அழுதனர்- (அனுமனைக் கண்ட அவ்வானர வீரர்களுள்)
சிலர் மகிழ்ச்சியினால் அழுதார்கள்; சிலவர் முன் நின்று ஆர்த்தனர் -
சிலர்அனுமனுக்கு முன்னாலே நின்று ஆரவாரித்தார்கள்; சிலவர் அண்மி
தொழுதனர் -
சிலர், (அனுமனை) நெருங்கி வணங்கினார்கள்; சிலவர் ஆடி
துள்ளினர் -
சிலர் குதித்துக் கூத்தாடினார்கள்; சிலவர் அள்ளி முழுது உற
விழுங்குவார் போல் மொய்த்தனர் -
சிலர் (அனுமனை) எடுத்து முழுவதும்
விழுங்குபவர் போன்று (அவனை) நெருங்கிச் சூழ்ந்து  கொண்டனர்; சிலவர்
சுற்றும் தழுவினர் -
சிலர் சுற்றிலும் அனுமனைஆலிங்கனஞ் செய்தார்கள்;
சிலவர் தாங்கிக் கொண்டு சுமந்தனர் - சிலர்அனுமனைத் தாங்கித் தூக்கிச்
சுமந்து கொண்டார்கள்.

     அனுமனைக் கண்டவானர வீரர்களின் மகிழ்ச்சிச் செயல்கள்
கூறப்பட்டன.                                               (4)