அங்கதன்முதலியோரிடம், அனுமன் சீதை கூறியஆசியைத் தெரிவித்தல் 6013. | வாலி காதலனை முந்தை வணங்கினன்; எண்கின் வேந்தைக் காலுறப் பணிந்து,பின்னை, கடன்முறை, கடவோர்க்கு எல்லாம் ஏலுற இயற்றி,ஆங்கண் இருந்து, 'இவண் இருந்தோர்க்கு எல்லாம், ஞால நாயகன்தன்தேவி சொல்லினள், நன்மை' என்றான். |
முந்தை வாலிகாதலனை வணங்கினன் - (அனுமன்) முதலில், வாலியின் மகனான அங்கதனை வணங்கி; எண்கின் வேந்தை காலுறப் பணிந்து - கரடிகளுக்கு அரசனான சாம்பவானை, அவன் அடிகளில் பொருந்துமாறு வணங்கி; பின்னை கட வோர்க்கு எல்லாம் - அதன் பிறகு, உரியவர்களுக்கு எல்லாம்; கடன் முறை ஏல் உற இயற்றி - செய்யத்தக்க மரியாதை முறைகளை ஏற்றபடி செய்து; ஆங்கண் இருந்து - அங்கு ஒரு புறத்தே அமர்ந்திருந்து; இவண் இருந்தோர்க்கு எல்லாம் - இங்கு உள்ளவரான உங்கள் அனைவர்க்கும்; ஞால நாயகன் தன் தேவி - உலகுடை நாயகனான இராமபிரானுடைய தேவியாகிய பிராட்டி; நன்மை சொல்லினள் என்றான் - நலந்தருவனவாகிய ஆசீர்வாதங்களைச் சொல்லி அருளினாள் என்று கூறினான். அங்கதன்இளவரசனும் படைத்தலைவனும் ஆதலால், அவனுக்கு முதல் வணக்கம். சாம்பவான் பிரம புத்திரனாதலாலும், வயதினாலும் அறிவினாலும் சிறந்தவனாதலாலும், கடல் கடந்து செல்ல அனுமனை ஊக்கப்படுத்திய சிறப்பினன் ஆதலாலும், அவனுக்கு, கால் உறப் பணிந்த வணக்கம். (சாஷ்டாங்க நமஸ்காரம்) (7) |