6015.

ஆண்தகைதேவி உள்ளத்து அருந் தவம் அமையச்
                            சொல்லி,
பூண்ட பேர்அடையாளம் கைக் கொண்டதும் புகன்று,
                            போரில்
நீண்ட வாள்அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச்
                            சிந்தி
மீண்டதும்,விளம்பான்-தான் தன் வென்றியை
                            உரைப்ப வெள்கி.

     ஆண்தகை -ஆண்மைக்குணம் நிறைந்த அனுமன்; தேவி உள்ளத்து
அருந்தவம் -
பிராட்டியின் மனத்தில் உள்ள அரிய தவமாகிய
கற்பொழுக்கத்தை; அமைய சொல்லி - (அவர்களுக்கு விளங்கும்படித்)
தெளிவாகச் சொல்லி; பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும்
புகன்று -
(பிராட்டி) அணிந்திருந்த (சூடாமணியாகிய) பெரிய
அடையாளத்தைக் கையில் பெற்று வந்ததையும் சொல்லி; தன் வென்றியை
தான் உரைப்ப வெள்கி -
தனது வெற்றிச் சிறப்பைத் தானே சொல்ல
வெட்கப்பட்டு; போரில் நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் -
யுத்தத்தில் நெடிய வாள்களை உடைய அரக்கர்களுடன் நடந்த செய்தியையும்;
நெருப்பு சிந்தி மீண்டதும் -
(இலங்கை முழுவதிலும்)
 நெருப்பைவைத்து
விட்டுமீண்டு வந்த செய்தியையும்; விளம்பான் - சொல்லாமல் விட்டு
விட்டான்.

     தற்புகழ்ச்சிசெய்தல் மேன்மைக்கு இழுக்காம் ஆதலால், அரக்கரோடு
நிகழ்ந்த போர்ச் செய்தியையும், இலங்கையில் நெருப்பு வைத்ததையும்
அனுமன் சொல்லவில்லை.                                   (9)