அனைவரும்இராமபிரானைக்காண விரைதல் 6017. | 'யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை; சேவகன்தேவிதன்னைக் கண்டமை விரைவின் செப்பி, ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர் ஆற்றலே ஆம்; போவது புலமை' என்னா, பொருக்கென எழுந்து போனார். |
இனி வேறு எண்ணல்வேண்டுவது யாவதும் இறையும் இல்லை - இனிமேல்,வேறு எண்ணிப் பார்க்க வேண்டியது, எதுவும் சிறிதும் இல்லை; ஆவது சேவகன் தேவிதன்னை கண்டமை விரைவின் செப்பி - இனி நாம் செய்யத்தக்கது மகாவீரனான இராமபிரானுடைய மனைவியாகிய சீதையைப் பார்த்ததை விரைவில் சென்று சொல்லி; அவ் அண்ணல் - அந்த இராமபிரானது,; உள்ளத்து அருந்துயர் ஆற்றலே ஆம் - மனத்தில் உள்ள, போக்குதற்கு அரிய துன்பத்தைத் தணியச் செய்தலே ஆகும்; போவதே புலமை என்னா - (அதற்காக இனி இராமபிரானிடம்) செல்வதே அறிவுள்ள செயலாகும் என்று அனைவரும் ஒருமித்த கருத்தினராய்க் கூறி; பொருக் கென எழுந்து போனார் - விரைவில் எழுந்து சென்றனர். இது, எல்லா வானரவீரரும் ஒரு சேரத் தீர்மானித்துச் சென்ற செயலைக் கூறுவதாகும். பொருக்கென விரைவுக் குறிப்பு. (11) |