6019. | முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம் முற்றி, வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை, அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்; ஆழியான்மாட்டு இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம். |
வித்தகத் தூதன்- சதுரப்பாடுடைய தூதனாகிய அனுமன்; முத்தலை எஃகினாற்கும் - மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும்; முடிப்ப அரும் கருமம் முற்றி - செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி; மீண்டது இறுதியாய் - திரும்பி வந்தது முடிவாக; அத்தலை விளைந்த தன்மை அறிந்த எல்லாம் அறைந்தனம் - அங்கு நிகழ்ந்த செயல்களை தெரிந்த வரையிலும், சொன்னோம்; இத்தலை ஆழியான் மாட்டு நிகழ்ந்த எல்லாம் - இனி, இவ்விடத்தில் (கிட்கிந்தையில்) இராமபிரானிடத்தில் நடந்தனவற்றை எல்லாம்; இயம்புவான் எடுத்துக் கொண்டாம் - சொல்வதற்குத் தொடங்கினோம். இக்கவிதை,கவிக் கூற்று, முத்தலை எஃகினாற்கும் முடிப்பரும் கருமம்:- இலங்கையை எரியூட்டுதல். செயற்கரும் காரியம் செய்தமையால் அனுமன் வித்தகத்தூதன் எனப்பட்டான். வித்தகம் - திறமை. (சதுரப்பாடு) (13) |