6022.

ஆரியன்,அருந் துயர்க் கடலுள் ஆழ்பவன்,
'சீரியது அன்றுநம் செய்கை; தீர்வு அரும்
மூரி வெம்பழியொடும் முடிந்ததாம்' என,
சூரியன் புதல்வனைநோக்கிச் சொல்லுவான்;

     ஆரியன் அரும்துயர்க் கடலுள் ஆழ்பவன் -
பெருமைக்குரியவனான இராமபிரான், அரிய துன்பமாகிய கடலுள்
மூழ்குபவனாய்; சூரியன் புதல்வனை நோக்கி - சூரியனின் மகனாகிய
சுக்கிரீவனைப் பார்த்து; நம் செய்கை சீரியது அன்று - நாம் மேற்கொண்ட
காரியம் பயன்பட்டதாக அமையவில்லை; தீர்வு அரும் மூரி வெம் பழி
யொடும் முடிந்தது ஆம் என சொல்லுவான் -
தீராத பெரிய பழிச்
சொல்லோடும் முடிந்ததாகும் என்று, பின்வருமாறு எடுத்துக் கூறுபவனானான்.

     நம் செய்கை;இதுவரை பிராட்டியைத் தேட எடுத்துக் கொண்ட முயற்சி.
மூரி வெம்பழி; தன் மனையாளை, தீயோன் ஒருவன் எடுத்துச் செல்ல, இராமன்
அவளை மீட்கும் ஆற்றல் அற்றவனானான் என்று உலகத்தார் கூறுவது. இந்தக்
கவியில் தொகுத்துக் காட்டப்பட்ட செய்கை. பழி ஆகியவைகள் அடுத்த
நான்கு கவிகளில் வகுத்துக் காட்டப்படுகின்றன.                     (16)