அனுமன்,இராமனுக்குச் சீதையின் நிலையைக்குறிப்பால் உணர்த்துதல் 6027. | என்புழி,அனுமனும், இரவி என்பவன் தென் புறத்துஉளன் எனத் தெரிவது ஆயினான்; பொன் பொழி தடக் கை அப் பொரு இ்ல் வீரனும், அன்புறுசிந்தையன், அமைய நோக்கினான். |
என் புழி -என்று(இவ்வாறு இராமபிரான் சுக்கிரீவனை நோக்கி) வினாவிய காலத்தில்; அனுமனும் -; இரவி என்பவன் தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் - சூரியன் தெற்குத் திசையில் தோன்றியுள்ளான் போல (அவர் கண்களில்) காணப்பட்டான்; பொன் பொழி தட கை அ பொரு இல் வீரனும் - அழகு ததும்பி வழியும் பெரிய கைகளை உடைய ஒப்பற்ற வீரனான அந்த இராமபிரானும்; அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான் - அன்பு மிக்க மனத்தை உடையவனாய் நன்றாகப் பார்த்தான். அனுமனைச்சூரியனாகவும், அவன் தென் திசையிலிருந்து வருவதால், சூரியன் தெற்கிலிருந்துவருவதாகவும் கூறப்பெற்றது. கிழக்கிலிருந்து வரவேண்டியசூரியன், இப்போது தெற்குத் திக்கிலிருந்து வருகின்றான் என்று நயம் படக்கூறப்பட்டது. (21) |