அறுசீர் ஆசிரியவிருத்தம் 

6032.

'உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப்
                            பெற்ற
மன் பெரு மருகிஎன்னும் வாய்மைக்கும், மிதிலை
                           மன்னன்-
தன் பெருந் தனயைஎன்னும் தகைமைக்கும்,
                          தலைமை சான்றாள்-
என் பெருந்தெய்வம் ! ஐயா ! இன்னமும் கேட்டி'
                           என்பான்;

     ஐயா - ஐயனே !; என்பெருந் தெய்வம் - எனது சிறந்த
தெய்வமாகியபிராட்டி; உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும் - உனது
சிறந்தமனைவி என்ற தகுதிக்கும்; உன்னைப் பெற்ற மன் பெருமருகி
என்னும்வாய்மைக்கும் -
உன்னை மகனாகப் பெற்ற அரசரான தசரத
சக்கரவர்த்தியின் சிறந்த மருமகள் என்னும் சிறப்புக்கும்; மிதிலை மன்னன்
தன் பெருந்தனயை என்னும் தகைமைக்கும் -
மிதிலை நகரத்து அரசனாகிய
சனகனுடைய சிறந்தமகள் என்ற குணச்சிறப்புக்கும்; தலைமை சான்றாள் -
தலைமை உள்ளாதற்கு ஏற்பச் சால்புடையாள்; இன்னமும் கேட்டி என்பான்
-
இன்னும் நான் சொல்வதைக் கேட்பாயாக என்று மேலும் கூறுவானானான்.

     நன்மகள்ஒருத்தி, தேவி, மருகி, தனயை என்ற முறைமைப் பெயருக்கு
உரியவளாயிருப்பாள். ஆனால், பிராட்டியோ, அம்முறைமைப் பெயர்கள், தன்
மூலம் சிறப்படையும் நிலைமைக்குத் தலைமை சான்றவளாயிருக்கின்றாள்.
பிராட்டி, ஏற்கனவே, தேவி, மருகி, தனயை என்ற அளவில், தம்
கணவனாருக்கும், மாமனாருக்கும் தந்தையாருக்கும் சிறப்பு அளிக்கும்
நிலையில், உயர்ந்த வாழ்வினளாகத் தான் நடந்து கொண்டிருந்தாள். அது
இப்போது வெளிப்படுவது சிறைவாழ்வில். 'பிறருக்கு, உறவு முறையால்
பெருமை சேர்த்த பிராட்டி,
 எனக்குப் பெருந்தெய்வமாகக் காட்சி கொடுத்தாள்
என்று அனுமன் தெளிவாகக் கூறினான் என்க.                   (26)