6034. | 'உன் குலம்உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய தன் குலம் தன்னதுஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான் வன் குலம்கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து, என்குலம்எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது, எம் மோய் ? |
எம் மோய் -எமதுதாயாகிய பிராட்டி; உன்குலம் உன்னது ஆக்கி -உனது குலம், உன்னால் சிறப்புள்ளதாகி உன் பெயரால் நிலை பெறுமாறு செய்து; உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய தன் குலம் தன்னது ஆக்கி - உயர்ந்த புகழுக்கு (தன்னை ஒப்பவர் இல்லாமல்) ஒருத்தியாய் நின்ற தான் பிறந்த (சனகர்) குலத்தைத் தன் பெயரால் விளங்குமாறு செய்து; தன்னை இத்தனிமை செய்தான் வன்குலம் கூற்றுக்கு ஈந்து - தன்னை (உன்னைவிட்டுப் பிரிந்து) இவ்வாறு தனித்திருக்கும்படிச் செய்த இராவணனது கொடிய அரக்கர் குலத்தை யமனுக்குக் கொடுத்து; வானவர் குலத்தை வாழ்வித்து - தேவர்களது குலத்தை வாழச் செய்து; என் குலம் எனக்குத் தந்தாள் - எனது வானர குலத்தை, அனுமன் குலம் என்று உலகம் கொண்டாடும் பெருமையை எனக்குக் கொடுத்தாள்; இனி செய்வது என் ? - அப் பிராட்டி, இனிமேலும் செய்யக் கூடிய சிறப்புச் செயல் யாது இருக்கிறது. ஒரு குலத்தின்பெருமை, அக் குலத்தில் பிறந்த பெண்களிடத்தில் அடங்கியிருக்கின்றது. ஆனால், பிராட்டியோ, பிறந்த குலம், புக்க குலம், வானவர் குலம், வானரர் குலம் அத்தனையையும் பெருமைப் படுத்தி விட்டாள் என்பது பாடலின் கருத்து. இனி, அரக்கர் குலம், அழிவதும், வானவர்குலம் வாழ்வதும், தன் குலம் உலகின் பெருமை பெறுவதும், பிராட்டியின் கற்பால் நிகழக் கூடியது என்பதை, அனுமன் தனது மதி நுட்பத்தால் ஊகித்துத் துணிந்து கூறினான் என்க. மோய் - தாய். எம்மோய் - எம்முடையவனே எனக் கூறி இராமனை நோக்கிய விளியாகயும் ஆக்கலாம். (28) |