6035.

'விற் பெருந் தடந் தோள் வீர ! வீங்கு நீர் இலங்கை
                                    வெற்பில்,
நற் பெருந்தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன்
                                    அல்லேன்;
இற் பிறப்புஎன்பது ஒன்றும், இரும் பொறை என்பது
                                    ஒன்றும்,
கற்பு எனும்பெயரது ஒன்றும், களி நடம் புரியக்
                                    கண்டேன்.

     வில் பெருந்தடந்தோள் வீர - கோதண்டம் என்னும் வில்லை
ஏந்தியபெரியதும் இடமகன்றதுமான தோள்களை உடைய வீரனே !; வீங்கு
நீர்இலங்கை வெற்பில் -
மிகுந்து விளங்கும் நீரை உடைய கடலால்
சூழப்பட்டதிரிகூட மலை மேல் உள்ள இலங்கை நகரில்; நற் பெருந்
தவத்தள் ஆயநங்கையை -
பெரிய நல்ல கற்பொழுக்கத் தவத்தை
உடையவளானபிராட்டியை; கண்டேன் அல்லேன் - யான் காணவில்லை;
இல் பிறப்புஎன்பது ஒன்றும் -
(கண்டது எவை என்றால்) உயர் குடிப்
பிறப்பு என்றுசொல்லப்படுவது ஒன்றும்; இரும் பொறை என்பது ஒன்றும் -
சிறந்தபொறுமை என்று சொல்லப்படுவதொரு குணமும் கற்பு என்ற
பெயருடையதுஒன்றும்; களி நடம் புரிய கண்டேன் - (ஆகியவை ஒருங்கு
கூடி)களிப்போடு நடனம் புரியப் பார்த்தேன்.

     பெண்டிர்க்குரியசிறந்த குணங்கள் குலம், பொறுமை, கற்பு என்பவைகள்.
அக்குணங்கள் மூன்றும் ஒருங்கு கூடி, பிராட்டியிடம் சேர்ந்து, அவை
பெருமை பெற்றன. அதனால், அவைகள் களி நடம் புரிந்தன. தவம் என்பது,
தன்னைத் தான் கொண்டு ஒழுகும் நெறி. பெரும் தவம் என்பது, கணவனது
வாழ்விலும் தாழ்விலும் உடனிருந்து கற்பு நெறி வழுவாதிருத்தல்.
நற்பெருந்தவமாவது, தன்னைப் பிறர் பிரித்த நிலையிலும், துன்புறுத்திய
நிலையிலும், தனது குடிமை, பொறுமை, கற்பு என்பவைகட்குக் குறைவு நேராது
ஒழுகுவது. சீதா பிராட்டி, நற்பெருந்தவத்தளாக விளங்குவதை அனுமன்
எடுத்துக் கூறினான் என்க.                                   (29)