6041. | 'இலங்கையைமுழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி, பொலங் குழையவரைஎல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன், அலங்கு தண்சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அன்னாளை, கலங்கு தெண்திரையிற்று ஆய கண்ணி்ன் நீர்க் கடலில், கண்டேன். |
இலங்கையை முழுதும்நாடி - நான், இலங்கை நகர் முழுவதையும் தேடிப்பார்த்து; இராவணன் இருக்கை எய்தி - பிறகு, இராவணனது இருப்பிடத்தை அடைந்து; பொலம் குழையவரை எல்லாம் - பொன்னாலான காதணிகளை உடைய மகளிர்களை எல்லாம்; பொதுவுற நோக்கி போந்தேன் - பொதுவாகப் பார்த்துக் கொண்டு சென்று; அலங்குதண் சோலை புக்கேன் - அசைகின்ற குளிர்ந்த அசோகவனச் சோலையுள் நுழைந்தேன்; அவ்வழி அணங்கு அனாளை - அந்த இடத்தில் தெய்வம் போன்ற சீதா தேவியை; கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலின் கண்டேன் - கலங்கியனவும் வெண்மையானவுமான அலைகளோடு கூடிய கண்ணின் நீராகிய கடலின் இடையே கண்டேன். பிராட்டியின்கற்புத் திறத்தை உணர்த்திய பிறகு, அவளைத் தான் கண்டமையை உணர்த்துகின்றான் அனுமன். இராவணன் மாளிகையில் பிராட்டி இல்லை என்பதனால், அவன் வசப்பட்டிலள் பிராட்டி என்பது உணர்த்தப்படுகின்றது. 'கண்களால்' என்பதற்கேற்ப 'அணங்கு அனாளை' 'கண்ணின் நீர்க் கடலில் கண்டேன்' என்று இங்கே அனுமனின் முதற்காட்சி கூறப்பட்டது ஒப்பு நோக்குக. (35) |