6042. | 'அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச நெருக்கினர்காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க, இரக்கம் என்றஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி, தருக்கு உயர்சிறை உற்றன்ன தகையள், அத் தமியள்-அம்மா ! |
அளவு அற்றார்கள்அரக்கியர் - எண்ணி அளவிட்டுக்கூறமுடியாத அரக்கியர்கள்; அலகையின் குழுவும் அஞ்ச - பேய்களின் கூட்டமும் அஞ்சும்படி; நெருக்கினர் காப்ப - தப்பிப் போவதற்கு இடைவெளி விடாது, நெருங்கி நின்று காவல் புரிய; அச்சம் நின்பால் நேசமே நீக்க - அப்போது தனக்கு ஏற்பட்ட அச்சத்தை உன்னிடம் தான் கொண்டுள்ள அன்பின் மிகுதியே போக்க; அத் தமியள் - தனியளாகிய அப் பிராட்டி; இரக்கம் என்ற ஒன்றுதானே - இரக்கம் என்று சொல்லப்படுகின்ற ஒரு குணமே; ஏந்திழை வடிவம் எய்தி - ஒரு பெண்ணின் உருவத்தைப் பெற்று; தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் - கொடுமைமிக்க சிறையில் அடைபட்டிருப்பதைப் போன்ற தன்மை உடையவளாய் இருக்கின்றாள். பிராட்டி அசோகவனத்தில் இருந்த நிலை உணர்த்தப்பட்டது. 'நின்பால் கொண்ட நேசமே, அச்சத்தை நீக்கினமையால், அரக்கியர் கொடுமைகட்குச் சினம் கொள்ளாமல், அவரிடம் இரக்கமே காட்டினாள் பிராட்டி' என்று காரணம் காட்டிக் கூறினான் அனுமன் என்க. (36) |