6045.

'அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர்
                               துறப்பதாக
உன்னினள்; கொடிஒன்று ஏந்தி, கொம்பொடும்
                           உறைப்பச் சுற்றி,
தன் மணிக்கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து,
                           நாயேன்,
பொன் அடி வணங்கி நின்று, நின் பெயர் புகன்ற
                           போழ்தில்,

     அன்னது ஓர்பொழுதில் - அத்தன்மையதானசமயத்தில்; நங்கை -
பிராட்டி; ஆர் உயிர் துறப்பதாக உன்னினன் - அருமையான தனது
உயிரைவிட்டு விடுவதாக நினைத்தவளாய்; கொடி ஒன்று ஏந்தி கொம்
பொடும் உறைப்ப சுற்றி -
ஒரு கொடியைக் கையில் எடுத்து ஒரு மரத்தின்
கிளையில் உறுதியாகக் கட்டி; தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில்
-
தனது அழகிய கழுத்திலே சேர்த்துச் சுருக்கிட்டுக் கொள்ளும் சமயத்தில்;
நாயேன் தடுத்து - எளியனான அடியேன் அதனைத் தடை செய்வதாகி;
பொன் அடி வணங்கி நின்று - பிராட்டியின் திருவடிகளை வணங்கி நின்று;
நின் பெயர் புகன்ற போழ்தில் - உனது திருநாமத்தைச் சொன்ன பொழுதில்.

     குளகமாக அமைந்தஇச்செய்யுள் தொடர், அடுத்த செய்யுளில்
சொன்னாள் என்று முடியும். இராமபிரான் திருநாமத்தை அனுமான்
உச்சரித்ததே, பிராட்டி சுருக்கிட்டுக் கொண்டு உயிர் மாய்ப்பதைத் தடுத்தது
என்க.                                                    (39)