6046. | ' "வஞ்சனைஅரக்கர் செய்கை இது" என மனக்கொண்டேயும், "அஞ்சனவண்ணத்தான்தன் பெயர் உரைத்து, அளியை, என்பால் துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம்" என்று உவந்து சொன்னாள்- மஞ்சு என, வனமென் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள். |
மஞ்சு என வனமென் கொங்கை வழிகின்ற மழைக்கண் நீராள் - (மலைமேல் பெய்யும்) மழை போல், அழகும் மென்மையும் தவழும் தனங்களின் மேல் பெய்து தொடும் குளிர்ந்த கண்களின் நீரை உடையவளான பிராட்டி; இது, வஞ்சனை - (நான் இவ்வாறு உன் திருநாமம்) கூறியதை வஞ்சனை உடைய; அரக்கர் செய்கை - அரக்கர்களது செய்கையால்; என மனம் கொண்டேயும் - என்று கருதிச் சந்தேகித்தும்; என் பால் அளியை - (என்னை நோக்கி) என்னிடம் அருள் கொண்டவன் நீ; துஞ்சுறு பொழுதில் - யான் இறக்கும் சமயத்தில்; அஞ்சன வண்ணத்தான் தன் பெயர் உரைத்து - மை போல் கரிய திரு மேனியை உடைய இராமபிரானது திருநாமத்தைச் சொல்லி; துறக்கம் தந்தாய் - எனக்குப் பரலோக இன்பத்தைத் தந்தாய்; என்று உவந்து சொன்னாள் - என்று மகிழ்ச்சியோடு என்னிடம் கூறினாள். 'எம்பிரான் நாமம் சொல்லி உருக்கினன் உணர்வைத்தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ' என்று (கம்ப. 5254.) பிராட்டி கூறியதை அனுமன் நினைவுபடுத்திக் கொண்டு சொன்னது இது. எம்பிரான் திருநாமம் கேட்டல் துறக்க இன்பத்துக்குச் சமமானது. (40) |