6049. | 'வாங்கிய ஆழிதன்னை, "வஞ்சர் ஊர் வந்ததாம்" என்று ஆங்கு உயர்மழைக் கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி, ஏங்கினள்இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி வீங்கினள்;வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள். |
வாங்கிய ஆழிதன்னை - பிராட்டி, என்கையினின்றும் தன்கையில் வாங்கிக் கொண்ட மோதிரத்தை; வஞ்சர் ஊர் வந்த தாம் என்று - வஞ்சகரான அரக்கரது ஊருக்கு வந்ததனால் தூய்மை இழந்தது என்று எண்ணி; ஆங்கு உயர் மழைக்கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி - அப்பொழுதே உயர்ந்த மழை போன்ற கண்களின் நீர் கொண்டு, ஆயிரம் குடங்களால் (திருமஞ்சனம் செய்து புனிதப்படுத்துவது போல) நீராட்டி; ஏங்கினள், இருந்தது அல்லாள் இயம்பலள் - ஏங்கியவளாய் வாளா இருந்தது அல்லால் வேறு ஒன்றும் கூறமாட்டாதவளாயினாள்; எய்த்த மேனி வீ்ங்கினள் - இளைத் திருந்த திருமேனி பூரித்து; வியந்தது அல்லால் இமைத்திலள் - வியப்புற்றதல்லாமல் நோக்கிய கண்களை மூடினாள் இல்லை; உயிர்ப்பு விண்டாள் - பெருமூச்சு விட்டாள். இராமபிரானதுதிருவாழியைத் தன்கையில் வாங்கிக் கொண்ட பிராட்டியின் செயல்கள் கூறப்பட்டன. ஒன்றைத் தூய்மையாக்கி, தெய்வப் பெற்றியதாகச் செய்வதற்குத் திருமஞ்சனம் செய்ய வேண்டும். வஞ்சர் ஊர் வந்த மோதிரம், தூய்மை இழந்ததால், தனது ஆனந்தக் கண்ணீர் கொண்டு அதனை நீராட்டித் தூய்மைப் படுத்தினாள் பிராட்டி என்பதாம். (43) |