6050. | 'அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்த பின் அடுத்த எல்லாம் சொல் முறை அறியச் சொல்லி, "தோகை ! நீ இருந்த சூழல் இன்னது என்றுஅறிகிலாமே, இத்தனை தாழ்த்தது" என்றே, மன்ன ! நின்வருத்தப்பாடும் உணர்த்தினென்; உயிர்ப்பு வந்தாள். |
மன்ன ! -தலைவனே!; அடியனேன் நின் பிரிந்தபின் அடுத்த எல்லாம் அன்னவர்க்கு சொல்முறை அறிய சொல்லி - அடியவனாகிய நான் உன்னைப் பிரிந்த பிறகு நேர்ந்த செய்திகளை எல்லாம் பிராட்டியார்க்குச் சொல்லும் முறைமையால் அறியும்படிச் சொல்லி; தோகை நீ இருந்த சூழல் இன்னது என்று அறிகிலாமே - மயில் போன்றவளே ! நீ இருந்த இடம் இன்ன இடத்தது என்று தெரியாமையினாலேயே; இத்தனை தாழ்த்தது என்று - இத்தனை காலம் நீட்டித்தது என்றும் சொல்லி; நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் - (பிராட்டியைப் பிரிந்ததனால்) நீ வருத்தப்படும் தன்மையையும் தெரியச் சொன்னேன்; உயிர்ப்பு வந்தாள் - (அது கேட்டு) மூச்சு விடுதல் உற்றாள். பிராட்டியைஇராமபிரான் அதுவரை வந்து காணாமைக்குக் காரணம் கூறப்பட்டது. (44) |