6051. 

'இங்கு உளதன்மை எல்லாம் இயைபுளி இயையக்
                                  கேட்டாள்;
அங்கு உள தன்மைஎல்லாம் அடியனேற்கு அறியச்
                                  சொன்னாள்;
"திங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம்
                                தீர்ந்தபின்னை,
மங்குவென்உயிரோடு" என்று, உன் மலரடி சென்னி
                                வைத்தாள்.

     இங்கு உள தன்மைஎல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள் -
இவ்விடத்தில் உள்ளனவான நிலைமைகள் எல்லாவற்றையும் நடந்தபடியே
(நிகழ்ந்த முறையில்) பொருந்தக் கேட்டு; அங்கு உள தன்மை எல்லாம்
அடியனேற்கு அறியச் சொன்னாள் -
அவ்விடத்தில் உள்ள நிலைமைகளை
எல்லாம், அடியவனாகிய எனக்குத் தெரிந்து கொள்ளும்படி விளக்கமாகக்
கூறினாள்; இன்னே திங்கள் ஒன்று இருப்பென் - (மேலும்) இந்த இடத்தில்
ஒரு மாத காலம் உயிர் வைத்திருப்பேன்; திருவுளம் தீர்ந்த பின்னை -
(அதற்குள்
 என்னை மீட்க எம்பெருமானுக்கு) மனம் இல்லையாகுமானால்,
அதன் பின்பு; உயிரோடு மங்குவென் என்று உன் மலரடி
சென்னிவைத்தாள் -
உயிரிழப்பேன் என்று சொல்லி, உனது  தாமரை மலர்
போன்ற திருவடிகளைத் தலைமீது வைத்து (வணங்குவது போல) வணங்கிச்
சொன்னாள்.

     பிராட்டி, தன்னைமீட்கக் காலக் கெடு வைத்ததை அனுமன்
சொன்னானாயிற்று. 'மலரடி சென்னி வைத்தாள்' பாவனை.           (45)