வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை, வெய்யோர் பேர்வு இலாக்காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக் கார் நிறத்துஅரக்கர் என்போர் முதலிய, கணிப்பு இலாத, வார் கழல்அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதின் போனார்.
விரைவில்போனார் வீரரும் - விரைவில்புறப்பட்டவர்களாகிய வானரவீரர்கள் எல்லோரும்; வார் கழல் அனுமன் - நீண்ட வீரக்கழலை உடையஅனுமன்; விலங்கல் மேல் இலங்கை - திரிகூடம் என்னும்மலையின் மீதுள்ள இலங்கையில் வாழ்கின்ற; கொற்றம் கார் நிறத்து அரக்கர் என்போர் வெய்யோர் - வெற்றியையும் கரிய நிறத்தையும் உடைய அரக்கர்கள் என்று சொல்லப்படும் கொடியவர்கள் செய்யும்; பேர்வு இலா காவல் - பெயர்தல் இல்லாத காவல்; பாடும் - செய்யும் திறமும்; பெருமையும் - சிறப்பும்; அரணும் - கோட்டை முதலிய அரண்களும்; முதலிய - முதலான; கணிப்பு இலாத - அளவில்லாத பெருமைகளை எல்லாம்; சொல்ல - அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுவர; நெடிது வழி எளிதின் போனார் - நீண்ட வழியை எளிதாகக் கடந்து போனார்கள். (51)