|
ஆண்டுறையும் தெய்வம் பேசுதலல்லது மரம் முதலியன பேசா வென்பது கடைப்பிடிக்க
வென்றவாறாம்.
129--42. என்
திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய் - இளங்கொடிபோல்வாய் அங்ஙனமாய எனது
வரலாற்றைக் கேட்பாயாக, மன்பெருந் தெய்வகணங்களின் உள்ளேன் துவதிகன்
என்பேன் - மிகப்பெரிய தெய்வகணங்களில் உள்ளேனாகிய யான் துவதிகன் என்னும்
பெயருடையேன், தொன்றுமுதிர் கந்தில் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் - பழைமை முதிர்ந்த தூணில் மயன் எனக்கு ஒப்பாக அமைத்த பாவையைவிட்டு
யான் ஒரு பொழுதும் நீங்கேன், என் நிலையது கேளாய் - எனது நிலைமையைக் கேட்பாயாக,
மாந்தர் அறிவது வானவர் அறியார் -மக்களறியு மத்தனை விண்ணவரும் அறியமாட்டார்,
ஓவியச் சேனன் என் உறுதுணைத் தோழன் ஆவதை - சித்திரசேனன் என்பான் எனக்கு
மிக்க - துணையாகிய தோழனாவதை, இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ -இந் நகரத்திலுள்ளோருக்கு
யார் கூறினரோ, அவனுடன் யான் சென்று ஆடிடம் எல்லாம் - அவனோடு யான் சென்று
விளையாடுமிடங்களிலெல்லாம், உடன் உறைந்தார்போல் ஒழியாது எழுதி - உடன்
உறைந்து கண்டவர்போல் விடாமல் எழுதி, பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து
- பூவும் நறும் புகையும் பொருந்துமாறு சேர்த்து, நா நனி வருந்த என் நலம் பாராட்டலின்
- நா மிகவும் வருந்துமாறு என் சிறப்பினைப் பலவாறு பாராட்டுதலினால், மணிமேகலை
யான் வருபொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன் - மணிமேகலை ! யான் வரும்பொருளனைத்தையும்
துணிவுடன் கூறி வந்தேன், என் சொல் தேறு என - என் மொழியைத் தெளிவாயாக
என்று உரைப்ப ;
தானும் சித்திரசேனனும் ஆடிடமெல்லாம்
அறிந்தெழுதினமை கண்ட வியப்பினால், ''மாந்த ரறிவது வானவரறியார்'' என்றும்,
''ஆருரைத்தனரோ'' என்றும், ''உடனுறைந்தோர் போல்'' என்றும் தெய்வங் கூறிற்று.
வானவரும் என்னும் சிறப்பும்மை தொக்கது. பூவினைத் தூவியும் புகையினை யெடுத்தும்
என்க. பொருந்துபு : பொருந்த வெனத் திரிக்க. வருபொருளெல்லாம் - மேல்
நிகழுங் காரியமெல்லாம். என் நலம் பாராட்டலின் உரைத்தேன் என்றமையால்,
மக்கள் கொண்டாடு மளவிற்குத் தெய்வத்தின் அருள் வெளிப்படும் என்பது பெற்றாம்.
143--4. தேறேன் அல்லேன்
தெய்வக்கிளவிகள் - தெய்வ மொழிகளை யான் தெளியேனல்லேன், ஈறு கடைபோக
எனக்கு அருள் என்றலும் - எனது முடிபு இறுதியாக யாவற்றையும் எனக்கு உரைத்தருள்வாய்
என மணிமேகலை கூறலும் ;
தேறேன் அல்லேன் - தெளிவேன் என்றபடி.
ஈறு - மரணம்; வீடு பேறுமாம்.
|