|
சித்தமாகிய
உணர்வு உள்பொருள் அதனால் உணர்ந்து கொள்ளப் படும் நுகர்ச்சி உள்வழக்காதலின்
"சித்தத் துடனேயொத்த நுகர்ச்சி" உள்ளது சார்ந்த வுள் வழக்காயிற்று. உள்பொருட்குத்
தோற்றங் கூறல் இல்வழக்காதலால் "சித்தமுற் பவித்தது" என்றும், "மின்போல்"
என்றும் அதனை யெடுத்துக் காட்டினார். காரணம் காணப்படாததாகக் காணப்படும்
காரியத்தைக் கொண்டு கூறுவது இல்லது சார்ந்த உள்வழக்காகும். முன்பு இல்லாதது
பின்பு தோன்றியது கூறல் இவ்வில்லது சார்ந்த வுள்வழக்கின் பாற்படும் என்ப.
இனி, அருணந்திசிவனார் இவ்வறுவகை வழக்குகளையும், "உள்வழக் குளதுண்டென்கை
முயற்கோடின் றில்வ ழக்கே:" என்றும் "உணர்வுசார்ந்துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த
வுண்மை, உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த வின்மை, உணர்வுமுன் பின்றித்
தோன்றலில்லது சார்ந்த வுண்மை, உணரினில் லதுசா ரின்மை யுள்ளங்கை யுரோம
நாணே" (சிவ. சித்தி. பரபக். 74) என்றும் கூறுவர்.
217-8.நான்கு
நயமெனத் தோன்றப்படுவன-நால்வகை நயங்களெனத் தெளிய வுணரப்படுபவை; ஒற்றுமை
வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க - ஒற்றுமையும் வேற்றுமையும் புரிவின்மையும்
இயல்பும் என்பனவாம் என அறிக; ஒற்றுமை நயம்-அவற்றுள் ஒற்றுமை நயமாவது; காரண
காரிய மாகிய பொருள்களை ஒன்றாவுணர்தல் - காரணமும் காரியமுமாய் நிற்கும்
பொருள்களை வேற்றுமை கருதாது காரணமா யாதல் காரியமா யாதல் உணர்ந்து கோடலாம்;
வீற்று வீற்றாக வேதனை கொள்வது - காரண காரியங்களை ஒன்றாகவுணராது தனித்தனி
வேறுபடுத் துணர்ந்து கோடல்; வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும்-வேற்றுமை நயமென்று
கொள்கவென ஆசிரியர் விரும்புவர்; பொன்றக் கெடாப் பொருள் வழிப்பொருள்களுக்கு-முற்றக்
கெடுதலில்லாத முதற் பொருள் காரியப் பொருள் என்பவற்றிற்கு; ஒன்றிய காரணம்
- பொருந்தியுள்ள காரணம்; உதவுகாரியத்தைத் தருதற்கு உள்ளம் இல்லை என்றல்-விளைத்தற்குரிய
காரியத்தைப் பயத்தலை யறிதற்கேற்ற உணர்வுநிலை யில்லை யென்பது; புரிவின்மை
நயமெனப் புகறல் வேண்டும் - புரிவின்மை நயமெனக் கூறலை ஆசிரியன் விரும்பும்;
நெல்வித் தகத்துள் நெல் முளை தோன்றுமெனல்-நெல் விதையினின்று நெல் முளையே
தோன்றுமெனக் கோடல்; நல்ல இயல்பு நயம் - குற்றமற்ற இயல்பு நயமெனப்படும்
எ - று.
காரியத்தை விரும்புமொருவன் அதற்குரிய காரணம்
தோன்றிய வழி, அக்காரணத்தையே காரியமாகக் கூறல் ஒற்றுமை நயம். சோறு வேண்டுங்
குறையுடையானொருவன் அரிசி பெற்ற வழிச் சோறு பெற்றேன் என்பது ஒற்றுமை நயம்.
இவ்வாறே காரியத்துக்கும் கூறிக் கொள்க. இது புகை இது நெருப்பு எனக் காரண காரியங்களை
வேறுபடுத்துணர்வது</p>
|